ஓசூர்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
போலீசில் புகார்:
ஓசூர், உழவர் சந்தை, "நியூ டெம்பிள் லேண்ட் ஹட்கோ' பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; வேலூர் மாவட்டம், கனியம்பாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கல்வித்துறை நிதிகளை மோசடி செய்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், ஆசிரியர்களுக்கு இட மாறுதல், பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்றதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.
அதிரடி சோதனை:
கிருஷ்ணகிரி மாவட்ட, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், ஒரு குழுவினர், ஓசூரில் உள்ள வெங்கடேசன் வீட்டிலும், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், மற்றொரு குழுவினர், சூளகிரியில் உள்ள, அவரது மாமனார் ஆஞ்சப்பா வீட்டிலும், நேற்று அதிகாலை, ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். ஓசூர் வீட்டில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 41 சொத்துகளின் ஆவணங்களையும், சூளகிரியில், ஆஞ்சப்பா வீட்டில் இருந்த, வங்கி ஆவணங்களையும் கைப்பற்றினர்.
சொத்து பத்திரங்கள்:
டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறுகையில், ""தனியார் சந்தை விலை அடிப்படையில், கைப்பற்றப்பட்ட சொத்துகளை மதிப்பிடும்போது, வெங்கடேசன் வருமானத்துக்கு அதிகமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை சேர்த்துள்ளதை உறுதி செய்துள்ளோம். அவர் மீது, துறைவாரியாக மேல்நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்வோம்,'' என்றார்.
அரசியல் தொடர்பு:
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேசன், சூளகிரி ஒன்றிய, அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகள் சித்ராவையே, திருமணம் செய்து, அதே பள்ளியில், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக, பதவி உயர்வு பெற்றார். இவருக்கு, தி.மு.க.,வில் முக்கிய அரசியல்வாதிகளுடன், நெருங்கிய தொடர்பு உள்ளதால், அதை பயன்படுத்தி, உடனடியாக, ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, நர்சரி பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், மொரப்பூர், திருவண்ணாமலை, பர்கூர் என, பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
ஏற்கனவே இடைநீக்கம்:
ஓசூர் அடுத்த அம்லட்டியில், முஸ்லிம் பிரமுகர் ஒருவரின் நிலத்தை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேசன் மோசடி செய்து, தன் மனைவி சித்ரா பெயரில், பத்திரப் பதிவு செய்தார். அவர் போலீசில் புகார் செய்ததால், நில அபகரிப்பு சட்டப்படி, 2011ம் ஆண்டு, வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இதனால், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின், ஒரு வழியாக அந்த வழக்கில் இருந்து மீண்டு, வெளியே வந்த வெங்கடேசன், வேலூர் மாவட்டம், கனியம்பாடியில், மீண்டும் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில்:
தி.மு.க., ஆட்சியில், (2008-09) ஓசூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக, வெங்கடேசன் பணியில் சேர்ந்தார். அப்போது, ஓசூர் பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில், கொடிகட்டி பறந்தது. உள்ளூர் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடன் சேர்ந்து, அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய துவங்கினார். இதன் மூலம், அவரது மனைவி சித்ரா, மாமனார் ஆஞ்சப்பா பெயர்களில், ஓசூர், சூளகிரி, உத்தனப்பள்ளி பகுதியில், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்தார். மேலும், இவர், பைனான்ஸ் மற்றும் சீட்டுத் தொழிலும் நடத்தி வந்ததால், அதிருப்தியடைந்த ஆசிரியர் சங்கத்தினர், இவரை கண்டித்து, பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இவர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.