சென்னை: எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக 2 வார காலத்திற்குள் ஏ.ஐ.சி.டி.இ. விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தமிழகத்தில் தற்போது எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 35% மதிப்பெண்களை குறைந்தபட்ச வரம்பாக வைத்துக் கொண்டு மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
ஆனால், இந்தப் பிரிவு மாணவர்களுக்கு 40% மதிப்பெண் இருந்தால் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு 35% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுள்ளதை தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, இந்த வரையறையை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், இதே அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் பொறியியல் மாணவர் சேர்க்கையைத் தொடரவும் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இதே விவகாரம் தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய மனு ஒன்றை தமிழக அரசு மீண்டும் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.