நாமக்கல்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட, 77 பள்ளி தலைமையாசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயுமா என, கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், 62 பேர், அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள், 11 பேர் என, மொத்தம், 73 பேர் நேற்று முன்தினம், "சஸ்பெண்ட்&' செய்யப்பட்டனர். ஏற்கனவே நான்கு பேர், "சஸ்பெண்ட்&' செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கல்வித் துறையில் ஒரே நேரத்தில், 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பணத்தை கையாடல் செய்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயுமா&' என, கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறியதாவது: இந்த மோசடி சம்பவம் முழுக்க முழுக்க எங்கள் கவனத்துக்கு வராமல் அரங்கேறி உள்ளது. அதில் பள்ளித் தலைமையாசிரியர்கள், புரோக்கர்கள், ஆதி திராவிடர் நலத்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். எங்கள் நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதி திராவிடர் நலத்துறை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 17பி சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காது. அதற்கு மாற்றாக அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.