இந்த ஆண்டு 1.8 லட்சம் பேர், பொறியியலில் சேர விண்ணப்பித்தனர். ஆரம்பத்தில், கலந்தாய்வில் 1.6 லட்சம் இடங்கள் இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், கடந்த 4ம் தேதி நிலவரப்படி, கலந்தாய்வு இடங்களின் எண்ணிக்கை, 1,74,663ஆக உயர்ந்துள்ளது.
மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 507 என அண்ணா பல்கலை முன் தெரிவித்திருந்தது. புதிய கல்லூரிகள் வருகையால், தற்போது இந்த எண்ணிக்கை, 539 ஆக உயர்ந்துள்ளது. 32 கல்லூரிகள் புதிதாக வந்துள்ளன. இதனால், கலந்தாய்வு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஜூலை 7 முதல் கடந்த 4ம் தேதி வரை மொத்தம் 27 நாட்கள் நடந்த கலந்தாய்வில், 64,317 இடங்கள் நிரம்பின. இன்னும், 1,10,346 இடங்கள் காலியாக உள்ளன. வரும், 20ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும் நிலையில், 16 நாட்களில், மீதமுள்ள இடங்கள் நிரம்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகபட்சமாக, 60 ஆயிரம் முதல், 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதுகுறித்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் கலாநிதி கூறியதாவது: வசதி படைத்தோர், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும், நிகர்நிலை பல்கலையிலும் நேரடியாக சேர்ந்து விடுகின்றனர். வசதியில்லாத, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், கலந்தாய்வு மூலம் சேர அதிகளவில் வருகின்றனர்.
அரசு பொறியியல் கல்லூரிகளில், 40 ஆயிரம் ரூபாய் கட்டணமாக உள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளாக சேரும் மாணவருக்கு, அரசு, 20 ஆயிரம் ரூபாய் தருகிறது. கலந்தாய்வு மூலம் சேர்ந்தாலும், தனியார் கல்லூரி நிர்வாகங்கள், 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் கேட்கின்றன.
அரசு வழங்கும் தொகை போக, கூடுதலாக 60 ஆயிரம் ரூபாய் வரை, ஆண்டு ஒன்றுக்கு மாணவர் செலவழிக்கும் நிலை உள்ளது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இது பெரும் சுமை. இதனால், பொறியியல் அல்லாத வேறு படிப்புகளுக்கு சென்று விடுகின்றனர்.
கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், காலியிடங்கள் அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம். புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி தரக் கூடாது என, ஏ.ஐ.சி.டி.இ.,யை நாம் வலியுறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.