பள்ளிகளில் பசுமை தினங்களில் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த மன்றங்களுக்கான நிதியினை, சுற்றுச்சூழல் துறை வழங்குகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை அறிவிப்பு பலகை,மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு, கால நிலை மாற்றம், புவி வெப்பமயமாதலை தடுத்தல், புகையிலை ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு போன்ற பணிகளை செய்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த மன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த மன்றங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1250 வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே,பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, மாவட்டத்தில் தலா 100 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 32 மாவட்டங்களில், இந்தாண்டுமட்டும் 3200 மன்றங்கள் துவக்கப்படவுள்ளன. சுற்றுச்சூழல் மன்றங்கள் இல்லாத பள்ளிகள், அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.