Friday, July 27, 2012

பள்ளி பஸ்களில் செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க, அந்த வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சென்னை:"பள்ளி பஸ்களில் செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க, அந்த வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழை வழங்க, தனிப்பிரிவு ஏற்படுத்தவும், புதிய விதிகளில் வழி வகை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது; 15 நாட்களுக்குள் வரைவு விதிகளை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்ததில், பின் சக்கரத்தில் சிக்கி, மாணவி ஸ்ருதி, உடல் நசுங்கி பலியானாள். சீயோன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு, ஸ்ருதி படித்து வந்தாள். சம்பவம் தொடர்பாக, டிரைவர் சீமான், பள்ளி தாளாளர் விஜயன், பஸ் கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆஜர்
பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்', தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பள்ளி அதிகாரிகள், போக்குவரத்து கமிஷனர் மற்றும் பஸ்சுக்கு தகுதிச் சான்றிதழ் அளித்த அதிகாரிகள், கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு நேற்று, "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர். சம்பவம் குறித்து வழக்கறிஞர்கள் ஜார்ஜ் வில்லியம்ஸ், ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:போக்குவரத்து அதிகாரிகள் ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும் என அட்வகேட்-ஜெனரலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், உரிமையாளர், பள்ளி தாளாளர், கிளீனர், மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு-1 ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், இந்த அதிகாரிகள் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆர்.டி.ஓ., மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்திருப்பது ஒரு கண் துடைப்பாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு எதிராக துறை நடவடிக்கை எடுத்து, சட்டப்படி தகுந்த உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும்.
நிரந்தர தீர்வு
பள்ளி பஸ்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பஸ்களில் செல்லும் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க, ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் பராமரிப்பு, தகுதி, அவற்றின் நிலை பற்றி, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் எந்த வழிமுறையும் இல்லை.
ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்காக, பள்ளி பஸ்கள் இயங்குவதற்குரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய, விதிமுறைகளை தமிழக அரசு கொண்டு வருவதற்கு இது சரியான தருணம். இந்த விதியின் கீழ், தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தலாம்.
பள்ளி பஸ்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கவும், கடுமையான நிபந்தனைகளை விதிக்கவும், தனி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், புதிய விதியின் கீழ் இந்த தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கவும் வகை செய்ய வேண்டும். இரண்டு வாரங்களுக்குள், வரைவு விதியை அட்வகேட்-ஜெனரல் தாக்கல் செய்வார் என நம்புகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளியை (சீயோன் பள்ளி) மூடுவதற்கு, கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார். இந்தப் பிரச்னையை கோர்ட் தற்போது எடுத்துக் கொண்டுள்ளதாலும், படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் நலன் கருதியும், அந்தப் பள்ளியை மூட வேண்டாம்.நஷ்ட ஈடு
சீயோன் பள்ளி நிர்வாகம், தனது பதில் மனுவை அடுத்த விசாரணைக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நஷ்ட ஈடாக, 50 ஆயிரம் ரூபாயை, பள்ளி நிர்வாகம்ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா, போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவ், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் செந்தமிழ் செல்வி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள், கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தினர் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர். வழக்கறிஞர்களும் கோர்ட் ஹாலுக்குள் திரண்டிருந்தனர்.
விதிகளை மீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை:ஐகோர்ட் கருத்து:தாம்பரம், சேலையூர் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்ததில், உடல் நசுங்கி இறந்தாள். இந்தச் சம்பவம் பெற்றோர், பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
கைது:
இவ்வழக்கு, "முதல் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு:
அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன்: சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். டிரைவர் சீமான், பஸ்
கான்ட்ராக்டர் யோகேஷ், பள்ளி தாளாளர் விஜயன், கிளீனர் சண்முகம், மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு-1 ராஜசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை நீதிபதி: குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா?
அட்வகேட்-ஜெனரல்: இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணை நடந்து வருகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், ஆர்.டி.ஓ., படப்பசாமியை, "சஸ்பெண்ட்' செய்துள்ளோம். சீயோன் பள்ளியை மூடுவதற்கு, "நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். மாணவியின் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக முதல்வர் வழங்கியுள்ளார். அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.
"சஸ்பெண்ட்'
தலைமை நீதிபதி: "சஸ்பெண்ட்' உத்தரவு எவ்வளவு நாட்கள் தொடரும்? பத்திரிகைகளில் இதுபற்றிய செய்தி மறையும் வரையிலா?அட்வகேட்-ஜெனரல்: விசாரணை முடியும் வரை"சஸ்பெண்ட்' தொடரும். அரசு இந்த விஷயத்தில் மிகவும் சீரியசாக உள்ளது.தலைமை நீதிபதி: சட்டத்தை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இது ஒரு கொலை குற்றத்துக்கு சமமாக கருத முடியாதா? இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அரசிடம் அதிகாரம் உள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில், அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி வாகனங்கள் பராமரிப்பு, தகுதி குறித்து, விதிகளை அரசு வகுக்க வேண்டும். இந்த வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, தனியாக விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடுகிறோம். விதிகளை மீறுபவர்கள் மீது, சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வகை செய்ய வேண்டும்.வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ்: அரசு எடுக்கும் நடவடிக்கை கண் துடைப்பாக இருக்கக் கூடாது. கோர்ட் உத்தரவுக்குப் பின் தான், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பழைய பஸ்களை வாங்கி, கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
நிபந்தனை:தலைமை நீதிபதி: ஐந்து, பத்து ஆண்டுகள் ஓடிய பழைய பஸ்களை வாங்கி, பள்ளி பஸ்களாக பயன்படுத்தக் கூடாது என, விதிகளில் நிபந்தனை விதிக்க வேண்டும். தவறு செய்பவர்கள் மீது, சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் வகை செய்ய வேண்டும்.வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்: ஏற்கனவே "டிவிஷன் பெஞ்ச்' வழிமுறைகளை வகுத்துள்ளது. அதை பின்பற்றாதது, கோர்ட் அவமதிப்பாகும்.வழக்கறிஞர் பிரகாஷ்: அந்தப் பள்ளியை மூடுவது என்பது கடுமையான நடவடிக்கை. அங்கு, பிளஸ் 2 மாணவர்கள் உள்ளனர். அவர்களின் நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு கோர்ட்டில் வாதம் நடந்தது.
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Archive