அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு ஆய்வுக்கு கட்டாய கல்வி இயக்கம்
ராமநாதபுரம்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பறை, கட்டடங்கள், தேவையான ஆசிரியர்கள் போன்ற வசதிகள் குறித்து கண்காணிக்க, ஒன்றியம் வாரியாக, கட்டாய கல்வி உரிமை இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஒன்றியம் வாரியாக பெற்றோர், சுயஉதவிக்குழுவினர், ஓய்வு ஆசிரியர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை கட்டட வசதி, ஆசிரியர்கள் பற்றாக்குறை, லேப், குடிநீர், மைதானம் போன்ற வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மூலம் சென்னை திட்ட இயக்குனருக்கு அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த அறிக்கை அடிப்படையில், பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.